Tamil short message
126 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
முத்தான சிந்தனை துளிகள்!

விட்டுக்கொடுத்தால் விவாதங்கள் குறையும், தட்டிக்கொடுத்தால் தவறுகள் குறையும், ஊக்கப்படுத்தினால் உறவுகள் பலப்படும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்!
👫 ஆண்களைப் பற்றி பெண்கள் தவறாக எண்ணுவதும், பெண்களைப் பற்றி ஆண்கள் தவறாக எண்ணுவதும் மனித குணாதிசயங்களுள் இயல்பானவையாக மாறிவிட்டன. ஆனால், சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் குற்றம் குறை கூறிக் கொண்டு திரிவது நல்லதல்ல.

👫 காதல் வாழ்க்கைக்கு நடுவே இருவருக்குள்ளும் சில விஷயங்களை புரிந்து கொண்டு செல்வது மிகவும் அவசியமானது.

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் :

👫 ஆச்சரியங்கள் என்பது பிறந்தநாளன்று மட்டும் இரவு 12 மணிக்கு கொடுப்பதல்ல. அடிக்கடி கொடுங்கள்.

👫 மிகவும் ஆடம்பரமாக அதீத செலவில் இருக்க வேண்டும் என்றில்லை. உங்கள் இருவருக்கும் இடையில் காதலை அதிகரிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அன்றைய பொழுதினை அழகாக்கும் விஷயமாக கூட அது இருக்கலாம்.

👫 இது ஆண்கள் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்ப்பார்கள். தன்னுடைய மனைவி தனக்கு நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

👫 உங்களுடைய வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் நேர்மையுடன் இருந்தால் மட்டுமே அவரும் உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்.

👫 பேச்சு உறவை பலப்படுத்தும். பேசுவது என்பது கேட்பதையும் சேர்த்தே அடங்கியிருக்கிறது.

👫 அலுவலகத்தில் இருந்து வந்தவுடனேயே, காலையிலிருந்து நடந்த விஷயங்களை டேப் ரெக்கார்டர் போல சொல்ல ஆரம்பிக்காமல் முதலில் ஆசுவாசப்படுத்துங்கள்.

👫 இன்றைக்கு வேலை எப்படி? என்று விசாரியுங்கள் பின்னர் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பியுங்கள். மிக முக்கியமாக அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்.

👫 அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவர்கள் ரிலாக்ஸ் ஆகும் விதமாக டீ கொடுப்பது, அவர்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் கொடுப்பது, அமைதியான சூழலை உருவாக்குவது என்று இருங்கள்.

👫 இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் கணவருக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும். வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன விஷயங்களை நீங்களே செய்து பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் கணவருக்கு எனர்ஜி பூஸ்டராகவும் நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும்.

👫 உங்கள் தன்னம்பிக்கையினால் அவர் மீண்டு வரவும் வாய்ப்புண்டு. மகிழ்ச்சியாக இருங்கள். அலுவலகத்தில் இருக்கும் டென்ஷனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால் அவருக்கு ஆறுதல் அளித்து அதனை சமாளிக்கும்படி சொல்லுங்கள்.

👫 அதே போல நீங்கள் கொடுத்த இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புரிய வைத்திடுங்கள். என்னால் என் மனைவி, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்திடும்.

👫 இது கணவன் மனைவி மட்டுமல்ல நட்பு, காதல் என எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கான இடத்தை கொடுங்கள். அதே சமயம் எல்லா நேரத்திலும் எங்கே தன்னை ஏமாற்றி விடுவாரோ என்ற பயம் கொண்டு நச்சரிப்பதும் வேண்டாம்.

👫 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். அவர்களிடத்தில் நீங்கள் சொல்கிற சின்ன சின்ன பாராட்டுக்கள் கூட அந்த நாளை அழகாக்கும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தமிழர்களின் மொழியும், இலக்கியமும்..!!




தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமஸ்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005-ஆம் ஆண்டு தமிழே முதலாவதாகச் செம்மொழி என ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ், அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.

சங்க இலக்கியம் :

தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அறநூல் திருக்குறள், இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது.

சங்கம் மருவிய கால இலக்கியம் :

கி.பி 300-இலிருந்து கி.பி 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே பௌத்த தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது.

பக்தி கால இலக்கியம் :

கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ் பக்தி இயக்கம் வலுப்பெற்றது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூற்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. கி.பி 850-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1250-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைக்கால இலக்கியம் :

கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்றது. தற்கால இலக்கியம் 18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.

தமிழ் வாழ்க..!!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்! #WorldElephantDay



சங்க இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம், அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும் விலங்கு யானை. தமிழர்களில் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் இந்த யானைகள். சங்கத்தமிழன், தான் இயற்றிய இலக்கியத்தில் எவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருக்கிறான் என்று பார்க்கலாம்.

வீரமும் வெற்றியும் யானையினுடையதே :

புதர் ஒன்றில் தனது கூட்டத்துடன் மேய்ந்துகொண்டிருந்த ஆண் யானை, நீர்நிலை ஒன்றில் பதுங்கியிருந்து தன்னைத் தாக்க வந்த புலியை தனது கூரிய தந்தத்தால் குத்தி கொன்று, தந்தத்தில் வழியும் குருதியை கொட்டும் மழை நீரில் கழுவி விட்டு மலைச்சரிவில் இறங்கி தனது கூட்டத்துடன் சேர்ந்துகொண்டது என்கிறது கபிலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் ஒன்று. புலியைக் கொல்லும் யானையை போரில் ஒருவன் கொல்கிறான், அதுவும் ஆயிரம் யானைகளைக் கொன்று குவிக்கிறான் என்றால் அவனைப் போற்றி பாடாமல் இருக்க முடியுமா? அப்படி அமைந்தது தான் பரணி.


மாபெரும் போரில், ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனை வாழ்த்திப் பாடுவதாக அமைகிறது பரணி இலக்கியம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை வீழ்த்தும் யானைப்படையானது போரின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைச் சங்க இலக்கியம் போற்றிப் பாடுகிறது. இது ஒருபுறம் என்றால், இலங்கையின் வன்னியில், மதங் கொண்ட யானையை அடக்கிய ’அரியாத்தை’ என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை”என்னும் நாட்டுக்கூத்தை செல்லத்துரை என்பவர் எழுதினார். இப்படி யானையை அடக்குவதும், வதம் செய்வதும் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் கருதினர்.

அதியமானின் யானைப்படைகளைக் கண்ட எதிரி நாட்டு மன்னன், தனது கோட்டை கதவுகளுக்கு வலிமையான புதிய கணையமரங்களைப் பொருத்தினர் என்று அவ்வையார் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.

காதலும் யானையும் :

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

எனத் தன்னுடைய திருமணக்கனவைப் பற்றி நாச்சியார் திருமொழியில் கூறுகிறார் ஆண்டாள். அதாவது, திருமால், ஆயிரம் யானைகள் சூழ வருகிறார். அக்காட்சியைக் காணும் மக்கள், பாதையின் இரு புறமும் பொற்குடங்களை வைத்து, தோரங்கள் கட்டி வரவேற்பதாகக் கனவு கண்டதை தன் தோழியிடம் ஆண்டாள் கூறுவதாக அமைகிறது அப்பாடல்.

”நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே”  –  குறுந்தொகை.

பிரிந்து சென்ற காதலன் விரைவில் வருவான் எனத் தோழி, தலைவியிடம் கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில், தலைவன் சென்ற பாலை நிலத்தில், வலிமையான ஆண் யானை, மென்மையான கிளைகளை உடைத்து பெண் யானைக்குக் கொடுக்கும் காட்சி இருக்கும். அதனைப் பார்க்கும் தலைவன், விரைவில் வந்து சேர்வான் எனக் கவலையில் இருக்கும் தலைவிக்கு தோழி கூறுகிறாள். காதலிலும் யானை இன்றியமையாததாக உள்ளது என்பதை மேற்கண்ட இரு பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.


யானையை விட மனிதர்களிடம் தள்ளி நிற்க வேண்டும் :

”கொம்புளதற்கு ஐந்து  குதிரைக்கு பத்துமுழம்

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி” -  நீதி வெண்பா

இப்பாடலில், கொம்பிருக்கும் விலங்குகள் இருக்கிறது என்றால் அது இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து முழம் தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து முழம் தள்ளி நிற்க வேண்டும், அதே யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். அதே போல்,  தீயோரைக் கண்டால் கண் காணாத தூரத்திற்கு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறது இப்பாடல். மனிதர்களையும், அவர்களின் குணங்களையும் விளக்குவதற்காக யானையை ஒப்பிட்டு இந்த பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், மிகப்பெரிய விலங்கான யானையை விட ஆபத்தானவன் மனிதன் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

சங்க இலக்கியங்களில் வீரத்திற்கும் காதலுக்கும், ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்ட யானைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிக்கையில் மிகவும் சுருங்கிவிட்ட யானைகளில் வாழ்வியலையும் அதன் வாழிடத்தையும் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!

'எருதைப் போல் பொறுமையாக இரு. சிங்கத்தைப் போல் தைரியமாக இரு. தேனீயைப் போல சுறுசுறுப்பாக இரு. பறவையைப் போல் உற்சாகமாக இரு..."
இறப்பின்போது யாருக்கெல்லாம் ராணுவ மரியாதை... வானம் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஏன்?



நம் நாட்டில் இறந்துபோன சில தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்படும். இந்த இறுதி ராணுவ மரியாதையும், 21 குண்டுகளும் எல்லாருக்கும் அரசாங்கம் வழங்கிவிடுவதில்லை. அதற்கென்று சில வரையறைகள் வைத்திருக்கிறார்கள். 

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்த முடிவை மாநில அரசும் எடுக்கலாம் என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. இறந்துபோனவர் நம் சமூகத்துக்கு எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும். அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறையில் மிகப்பெரிய பங்களிப்பையும் சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தவர் இறந்துபோகிறார் எனில் அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய மாநில அரசு முடிவெடுக்கும். 


கேபினட் அமைச்சர்களுடன் கூடி விவாதித்த பிறகு முதலமைச்சர் இந்த முடிவை எடுப்பார். பிறகு, அந்த நபர் இறந்த தினம் 'மாநிலத் துக்க தினம்' என்று அறிவிக்கப்படும். அது உறுதி செய்யப்பட்டதும் மாநிலத்திலுள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். அது முடிந்ததும் இறந்தவருக்கான அரசு மரியாதைப் பணிகள் முடுக்கிவிடப்படும்.

அப்படி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்போது அந்த ராணுவச் சடங்குகளுள் கடைப்பிடிக்கிற ஒரு வழக்கம், வானம் பார்த்து துப்பாக்கிச் சுடுதல். 


போர் முடிந்து சொந்த நாட்டுக்கு கடல் வழியாகத் திரும்ப வந்ததும், இனி யாரையும் தாக்குகிற எண்ணம் இல்லை என்பதைத் தெரிவிக்கும் விதமாக, துப்பாக்கியில் இருக்கிற அனைத்து ரவைகளையும் கடற்கரையை நோக்கி சுட்டுவிடும் சடங்கை கடற்படையினர் செய்து வந்திருகிறார்கள். அதுபோலவே, அந்தக் காலகட்டத்தில் பயணம் செய்வதற்கான முதன்மையான வழி கடல் மார்க்கம்தான். ஆகவே, வேறுநாட்டினர் கடல்வழியாக இறங்கி இன்னொரு நாட்டுக்குள் நுழையும்போது தங்களுடைய துப்பாக்கிகளில் குண்டுகள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வானம் பார்த்து குண்டுகளை முழங்கிவிட்டு நாட்டுக்குள் நுழைவார்கள். பிரிட்டிஷார் கொண்டுவந்த பழக்கம் இது. தங்களுடைய ஆதிக்கத்தில் நிறைய நாடுகளை அவர்கள் வைத்திருந்ததால் இதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்தது. பிறகு, தலைவர்களின் இறப்புக்கு இந்தத் துப்பாக்கிச் சுடுதலை ஒரு மரியாதையாகச் செய்து வந்திருக்கிறார்கள். கடற்படையின் நீண்டநாள் பாரம்பர்யமாகிப்போன இது பதினேழாம் நூற்றாண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு ராணுவ மரியாதையில் ஒரு பங்காக, ஒரு மரபாகி நிலைத்துவிட்டது.  

இந்தியாவை அவர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் இறந்தவர்களின் தகுதியைப் பொறுத்து முழங்கப்படும் குண்டுகளின் எண்ணிக்கை மாறுபட்டது. இறந்தவர் நாட்டின் அரசர் என்றால் 101 குண்டுகள் என்பதில் இருந்து டையூ டாமன் கவர்னர் என்றால் ஒன்பது குண்டுகள் வரை முழங்க வேண்டுமென அவர்கள் வரையறை செய்திருந்தார்கள். அதற்குப் பிறகு, இந்தியா ஆட்சிக்கு வந்ததும், இந்த வேறுபாடுகள் களைந்து, இருபத்தியோரு குண்டுகள் என்பது நிலையாகிவிட்டது.

பின்னர், இது சர்வதேச முறையாக மாறியது. இறுதிச் சடங்கில் அரசு மரியாதையின்போது சுடப்படுகின்ற இந்தக் குண்டுகள் சோடியம் நைட்ரேட் என்கிற பவுடரால் தயாரிக்கப்படுவை. குண்டுகள் முழங்குதல் என்பது இறுதிச் சடங்குகளில் மட்டுமின்றி குடியரசுத் தலைவர் பதவியேற்பு, வெளிநாட்டு அதிபரை நம் நாட்டுக்கு வரவேற்கும்போது, குடியரசு தினம் என இப்படியான அரசு விழாக்களிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது. முக்கியமாக, துப்பாக்கியில் சுட்டு முடித்ததும் அதில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கீழே விழுந்த குண்டுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கட்டாயமும் உண்டு. ராணுவ மரியாதையில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு காரியத்துக்குப் பின்னாலும் இதுபோன்ற பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.
வீடியோ கேம் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்க சில ஆலோசனைகள்!

பெற்றோர் கவனத்துக்கு... அளவில்லாமல் வீடியோ கேம் விளையாண்டால் குழந்தை மனநோய் பாதிப்புக்கு உள்ளாகலாம்!  

தெருவில் நின்று ஒரு சுற்று திரும்பிப் பார்த்தால் 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. 


``தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதுவே அடிமைப்படுத்துவதும் நிலைக்குச் செல்வது ஆபத்து" என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். 


2016-ல் உலக மக்கள் தொகையில் 251 கோடி பேர் வீடியோ கேம் (Online and Offline) விளையாடியிருக்கிறார்கள். 2018-ல் உலக அளவில் வீடியோ கேம் நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 8.2 லட்சம் கோடி என்கிறது புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெளியிடும் ஸ்டேடிஸ்டா’ என்ற இணையதளம். இதன்மூலம் மொபைல் நம் வாழ்க்கையில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 1971-ம் ஆண்டு, முதல்முதலாக வர்த்தக நோக்கில் வீடியோ கேம் இயந்திரங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு வரிசையாகப் பல படிநிலைகளைக் கடந்து இன்று விஸ்வரூப வளர்ச்சியடைந்திருக்கிறது வீடியோ, டிஜிட்டல் கேம் உலகம்.

வீடியோ கேம், டிஜிட்டல் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது ஒரு வகை
மனநல பாதிப்பு’ (Mental Disorder) என்று ஐ.சி.டி-ன்( International Classification of Diseases) 11-வது பதிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் நோய்களை வகைப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஐ.சி.டி-யின் 11 வது பதிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அடிமையாகும் குணாதிசயத்தால் ஏற்படும் மனநல பாதிப்பு என்ற பிரிவின் கீழ் கேமிங் டிஸ்ஆர்டர்’ வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.



கேம் விளையாடுபவர்கள் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகநேரம் விளையாடுபவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூகச் செயல்பாடுகளிலோ, குடும்ப வாழ்க்கையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே கவனிக்கவேண்டும். இதுபோன்ற பாதிப்புகள் அவர்களுக்கு
கேமிங் டிஸ்ஆர்டர் மனநோய் இருப்பதற்கான அறிகுறிகள்.

அன்றாடம் செய்ய வேண்டிய அடிப்படையான வேலைகளைக்கூட செய்யாமல் எப்போதும் கேம் விளையாடிக்கொண்டே இருப்பது, வேறு எதிலும் கவனமின்றி தீவிரமாக விளையாடுவது, இடைவெளியே இல்லாமல் அதிகநேரம் விளையாடுவது, போன்றவை
கேமிங் டிஸ்ஆர்டர்-க்கான அறிகுறிகள். தொடர்ந்து கேம் விளையாடிக்கொண்டே இருந்தால் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கல்வி, வேலை, பிற அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் பெரும் மன அழுத்தம் ஏற்படும். 

`
வீடியோ கேம் விளையாடுவது ஒரு பொழுதுபோக்காக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை’’

``வீடியோ கேம் நிறுவனங்களின் இன்றைய அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த வளர்ச்சிதான் இன்று ஆபத்தாக நம்முன் நிற்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடியோ கேம் என்பது ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்தது. டிவி பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது போன்று ஒரு பொழுதுபோக்கு. 80-களில் பிறந்தவர்கள் தெருக்களில், மைதானங்களில் விதவிதமான விளையாட்டுகளை விளையாடினார்கள். இப்போது இருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருக்கிறார்கள். கட்டாயத்தின் பேரில்தான் வெளியே செல்கிறார்கள்.

வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. `அது உங்கள் தினசரி வாழ்க்கையை பாதித்தாலோ, அதனால் ஏதாவது கெட்டது நடந்தாலோ, அதை மனநல பாதிப்பு' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கேம் விளையாடுவதே மனநல பாதிப்பு என்று சொல்லமுடியாது. கேம் விளையாடுவதால் உறவோ, படிப்போ, வேலையோ பாதிக்கப்பட்டால் மட்டுமே அது மனநல பாதிப்பு..."

இப்போது ஆன்லைன் கேமில் பணம் சம்பாதிக்கவும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடவும் முடியும். இது விளையாடுபவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. விளையாட்டில் ஒவ்வொரு முறை வெற்றிபெறும் போதும், மற்றவர்களால் புகழப்படுவார்கள். அந்த உடனடி பாராட்டுதல் அவர்களை மேலும் மேலும் விளையாடத் தூண்டுகிறது. இங்கே புகழ்ச்சி, பாராட்டுக்கு மயங்காதவர்களே இல்லை. எந்தவொரு செயலுக்கு உடனடியாகப் பாராட்டு கிடைக்கிறதோ, அதை நாடிச் செல்வது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட உத்தியைத்தான் கேம் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதேபோல, விளையாட்டில் ஒரு சுவாரஸ்யமும், பணம் ஈட்டும் வழியும் இருந்தால் சொல்லவே வேண்டாம்.

வீடியோ கேமால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே. திரைப்படங்களுக்கு வயது தரச்சான்று இருப்பது போலவே, கேம்களுக்கும் இருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் கேம்களுக்கு இதை முறையாகக் கடைபிடிக்கவேண்டும். 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டை, அதற்குக்
கீழ் இருப்பவர்கள் விளையாடக் கூடாது. 5 வயதுக்கு மேல், 10 வயதுக்கு மேல், 12 வயதுக்கு மேல், 15 வயதுக்கு மேல் எனப் பல பிரிவுகளாக கேம்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கேம் சிடிக்கள், ஆன்லைன் கேமை லாகின்' செய்யும்போதும், ஸ்மார்ட்ஃபோனில் கேம் டவுன்லோடு செய்யும் போதும், எத்தனை வயதுக்கு மேல் இருப்பவர்கள் அந்த கேமை விளையாடலாம் என்று தெளிவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் பெற்றோர்கள் சரியாகக் கவனிப்பதில்லை. சிறுவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. சிறுவர்கள் அடம்பிடித்தே வீடியோ கேம் போன்ற கருவிகளை வாங்கிவிடுவார்கள். வாங்கிக் கொடுத்துவிட்டோம், ஏதோ விளையாடுகிறான்’ என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

சிறுவர்கள் விளையாடக்கூடாத வன்முறை, பாலியல் தொடர்பான கேம்கள் அவர்களின் மனதில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதை பெற்றோர்களே முறைப்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு அதன் பின்விளைவுகள் தெரியாது. குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள்', என்ன டவுன்லோடு செய்கிறார்கள்' என்றெல்லாம் கண்காணிக்க முடியவில்லையென்றால், கேம், ப்ளே ஸ்டேஷன், மொபைல்ஃபோன்கள் போன்றவற்றை அவர்களுக்கு வாங்கித்தரக் கூடாது. 

வயது வந்தவர்களும் இப்போது அதிகமாக கேம் விளையாடுகிறார்கள். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் விளையாடுவதே பிரச்னைகளுக்குக் காரணம். நீண்டநேரம் கேம் விளையாடுவதால், தலைவலியும் கண்களுக்குப் பாதிப்பும் ஏற்படும். உடற்பயிற்சி செய்யாமல், சரியாகச் சாப்பிடாமல், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் விளையாடிக்கொண்டே இருந்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை உடனடியாகக் கவனித்தாக வேண்டும்.

எங்கள் வீட்டுக் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுகிறார்கள்', ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்' என்று யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. வீடியோ கேம் ஒரு நல்ல பொழுதுபோக்குதான், ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு செய்வது நல்லது.

சிறுவர்கள் கேமுக்கு அடிமையாவதைத் தடுக்க, பெற்றோருக்குச் சில ஆலோசனைகள்.

* தங்களுக்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும்  முடித்தபிறகே சிறுவர்களை மொபைல்போன், இணையதளம், வீடியோ கேம் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.  

* வீடியோகேம் உள்ளிட்ட கருவிகளை ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். விடுமுறை நாள்களாக இருந்தாலும் அதுதான் அளவு. 

* வீடியோ கேம் விளையாட்டுகளுக்கும் வயதுக் கட்டுப்பாடு இருக்கிறது. ஈ.எஸ்.ஆர்.பி (ESRB - Entertainment Software Rating Board), பி.ஈ.ஜி.ஐ (PEGI - Pan European Game Information) வயது விதிமுறைகளைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

* `பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருளை' (Parental Control Software) அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் இன்ஸ்டால் செய்வது நல்லது.

* ஸ்மார்ட்போன் உள்ளிட்ட திரையுடன் இருக்கும் அனைத்துக் கருவிகளையும் பெற்றோரின் பார்வையில், வீட்டின் பொதுவான இடத்தில் பயன்படுத்த சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* அறிவுத்திறனை வளர்க்கும் பொழுதுபோக்குகளான செஸ், புதிர் விளையாட்டுகள் போன்ற மற்ற விளையாட்டுகளை விளையாடச் செய்து, அவர்களைப் பாராட்டுங்கள். 

* எரிச்சலூட்டும் மனநிலையை மாற்றுவதற்காக தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். பெற்றோர் வேலையாக இருக்கும்போது, குழந்தைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன்களை அவர்களிடம் கொடுக்கவேண்டாம்.

* கட்டுப்பாடற்ற, பல பேர் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தவிர்க்க வேண்டும். அவை ஆஃப்லைன் கேம்களைவிட மோசமாக அடிமையாக்குபவை.

* குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளை பெற்றோர்களும் விளையாடக் கற்றுக்கொள்வது நல்லது. அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். மேலே சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்தால், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப விளையாட்டுகள் நல்ல பொழுதுபோக்காக அமையும்.

* தொழில்நுட்பமோ, வீடியோ கேமோ குழந்தைகளின் படிப்பையோ, அன்றாட செயல்பாடுகளையோ பாதிக்குமானால், குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் எதையும் கேட்காத பட்சத்தில், அவர்களை நல்ல மனநல ஆலோசகரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவர்களின் ஆலோசனைப்படி இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தனிமையைப் போக்குவது எப்படி?

புதியவர்களிடம் பேசுங்கள்

ரயில் பயணங்களில், பொது இடங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களோடு பேசுங்கள். அரட்டை மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

பிடித்தவர்களோடு அடிக்கடி உரையாடுங்கள்

மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்முடைய மூளைத் திசுக்களில், 'எண்டார்ஃபின்" என்ற இரசாயனப் பொருள் மிகுந்து, 'வென்ட்ரல் டெக்மெண்டல் பகுதி" துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விடுதி அறையில் உங்களுடன் தங்கியிருப்பவர்களோடு தினமும் உரையாடுங்கள்.

புத்திசாலித்தனமாகச் சமூக ஊடகங்களைக் கையாளுதல்

முதலாவதாக, நீங்கள் பதிவேற்றும் தகவல்களுக்கு எத்தனை 'லைக்ஸ்" கிடைக்கிறது என்பதைக் கணக்கிடுவதைக் கைவிடுங்கள். ஆன்லைனிலும் அர்த்தமுள்ள நட்பு வட்டங்களை உருவாக்குங்கள். நல்ல செய்திகளைப் பதிவேற்றுங்கள். சிரித்த முகத்துடன் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை உங்களுடைய 'புரொஃபைல் படமாக" வைத்துக்கொள்ளுங்கள்.

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது புதியவர்களை நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.

படைப்பாற்றலை மேம்படுத்துங்கள்

மேடைப் பேச்சாற்றல், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், கதை-கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும்போது உங்களுடைய ஆளுமைத் திறனும் மேம்பட்டு உங்களுக்குத் தனிமை எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

பகிர்ந்தால் பாரம் குறையும்

அர்த்தமுள்ள உறவுகள் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள். நம்மைப் புரிந்துகொண்டவர்களிடம், நம் தனிமையை வெளிப்படுத்தும்போது, அதற்குரிய தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

மனநல மருத்துவரை அணுகுதல்

பிரச்சனைகள் எல்லை மீறும்போது மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். சூழ்நிலையால் உண்டாகும் தனிமையை நம் எண்ணத்தால் வெல்லலாம்.
சாக்லேட் விரும்பி உண்பவர்களா நீங்கள்?


    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை விரும்பி உண்ண ஆரம்பித்துவிட்டனர். கடைகளில் பல விதங்களில் இவை கிடைக்கின்றன. சில சாக்லேட்டில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக்கப்படுகின்றன.

குழந்தைகள் அடம் பிடித்தாலும் வாங்கித் தராத பொருளாக டார்க் சாக்லேட் இருந்தது. ஆனால் அதில் உள்ள சத்து அளவிட முடியாதது என்பதை தற்பொழுது மக்கள் புரிந்து கொண்டதால், தற்போது பெற்றோர்கள் தாமாகவே குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் உள்ளன.

இதயம் பலம் பெற!

டார்க் சாக்லேட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றது. ஏனெனில் இதன் தன்மை இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் சாக்லேட் இதய நோய்களை குணப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை செயல்முறையாவும் நிரூபித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயத்தில் ஏற்ப்பட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களை வைத்து இதனை செய்துள்ளனர். வாரத்துக்கு 2 முதல் 6 சாக்லேட் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தக் குழாய் உதறல் நோய் பாதிப்பு குறைந்தது.

இதன் மூலம் அதிக சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு அதிக கலோரி ஏற்பட்டு இதய தசைகள் மற்றும் ரத்த குழாய் தசைகளை வலுப்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே இதய நோயாளிகள் சாக்லேட் சாப்பிடுவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா?

இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டார்க் சாக்லேட் உதவும். மேலும் சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இவை உதவும். அதுமட்டுமின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதாலும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.

புற்றுநோயை கட்டுப்படுத்துமா?

டார்க் சாக்லேட்டில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது. அதிலும் வயதான தோற்றத்தையும், சக்தி குறைவையும் டார்க் சாக்லேட் உண்பதால் போக்க முடியும்.

இரும்புச்சத்து குறைப்பாட்டை டார்க் சாக்லேட்டில் உள்ள இரும்புச்சத்து போக்குகின்றது. இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்வதால் குணமாகும்.

பல் பிரச்சனை உண்டாகுமா?

டார்க் சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்தும். அதாவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது.

எந்த வகை உணவு உண்டாலும் நன்றாக வாய் கொப்பளித்தால் தீங்கேதும் இல்லை.
தகவல் சுரங்கம் - ராஜாஜி ஹால் வரலாறு..!!

நான்காம் மைசூர் போர் கிழக்கிந்திய கம்பெனிக்கும், திப்புசுல்தானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய கம்பெனி பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், ஜான் கோல்ட்டிங்காம் தற்போதைய ராஜாஜி ஹாலை 1802-ல் கட்டினார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இது 'விருந்து மண்டபம்" என அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இடைக்கால அரசாங்கத்தின் சட்டசபைக் கூட்டங்கள் இங்கு தான் நடைபெற்றன. இந்திய விடுதலைக்கு பின், இது ராஜாஜி ஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கிராம சட்ட சபை - ஒரு சிறப்பு பார்வை!

கிராம சட்ட சபை என்றால் என்ன?

73வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 1993-ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது. இதன்படி, ஊரகப் பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி, இடைநிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும். கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

கிராம சபை கூட்டம் எப்பொழுது?

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), இந்திய விடுதலை தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நான்கு சிறப்பு நாட்களில் நடக்கிறது.

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் கிராமத்தைச் சார்ந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

முக்கிய அம்சங்கள்

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை.அதிகாரிகளே ஆனாலும் கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும்.

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கப்படும்.

பக்கத்து ஊர் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

விழிப்புணர்வு தேவை:

பல கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்கு தெரிவதில்லை. பல நேரங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதும் இல்லை. முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபைக் கூட்டங்கள் பற்றி மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இந்த திட்டங்களில் முக்கியத் தீர்மானங்களாக நீர்நிலைகளைத் தூர்வாருதல், குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை மூடுதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பொன்மொழி

'பிறர் ரசிக்க வாழ்வதை விட, உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் மகிழ்ச்சியை தரும்..!"
தாலாட்டுப் பாட்டு !



  தாலாட்டுப் பாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும் போது பாடப்படுவது. மிகப் பழங்காலம் தொடங்கி இந்தத் தாலாட்டுப் பாட்டு தமிழரிடையே இருந்து வந்துள்ளது. படிப்பறிவு இல்லாத சிற்றூர்(கிராம) தாய்மார்கள் தாங்களாகவே சொற்களை அடுக்கியும் இட்டுக்கட்டியும் பாடுவது 'தாலாட்டுப் பாட்டு". தாலாட்டுப் பாட்டில் குழந்தைக்கு அன்பைக் காட்டும் வேளையில் தேவையான கருத்துகளும் சொல்லப்படும்.

  இத்தகைய தாலாட்டுப் பாடல்களில் தாய்மை உணர்ச்சியின் ஆழம், குழந்தைப் பற்றிய வருங்காலப் பார்வை, குறிக்கோளுடைய உயர்ந்த சிந்தனை ஆகியவற்றைக் காண முடிகிறது என்றும் சிலர் கூறுவர். இப்பாடல்களில் பசுமையான நினைவுகளும், பாச உணர்வுகளும் பளிச்சிடும். கற்பனைச் சுவையும் காவிய அழகும் பட்டாம்பூச்சியாய் வட்டமிடும்.

  இந்த தாலாட்டுப் பாடலை நீங்கள் கேட்டதுண்டா?

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்

தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ
மல்லி பூ செண்டாலே

அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே

பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

'ஆராரோ.. ஆரிவரோ.."

யார் யாரோ வந்துவிட்டுப் போன இந்த உலகத்தில், நீ யாரோ? வருங்காலத்தில் நீ யாரோ?

என்று பொருள்படும்படி உள்ளது.

 மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடலில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடலில் முடிவடைகிறது. இன்ப துன்பங்களைப்பற்றி மக்களே பாடுவதால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் கூறுவர்.

இதயத்தை நெகிழ வைக்கும் தாலாட்டு வகை காலத்தை வென்றது. அழும் குழந்தையும், அதைத் தூங்க வைக்க இசைபாடும் ஓர் அன்புக் குரலும் இருக்கும் வரையில் அழியாத்தன்மைக் கொண்டது தாலாட்டாகும்.